சேலம் அருகே பரபரப்பு: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கி 20 பவுன் நகை கொள்ளை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


சேலம் அருகே பரபரப்பு: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கி 20 பவுன் நகை கொள்ளை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2020 3:45 AM IST (Updated: 5 Aug 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கி 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி, 

சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி தங்கமணி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் சிக்கி தங்கவேலும், அவருடைய மகனும் இறந்து விட்டனர். இதையடுத்து தங்கமணியும், அவருடைய மகளும் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தங்கமணியின் மகள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தங்கமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவருடைய வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் திடீரென அந்த கும்பல் தங்கமணியை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரை தாக்கினர். பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் யாஸ்மின், போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை நடந்த வீட்டுக்கு தடயவியல் நிபுணர் களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்டவைகளை சேகரித்தனர்.

இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கத்திமுனையில் பெண்ணை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story