அரை பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற சிறுவன் கைது - குவாகம் போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்


அரை பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற சிறுவன் கைது - குவாகம் போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்
x
தினத்தந்தி 5 Aug 2020 3:45 AM IST (Updated: 5 Aug 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

குவாகம் போலீஸ் நிலையம் அருகே மூதாட்டியை அரை பவுன் நகைக்காக கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் காலனி தெருவை சேர்ந்த லோகிதாசின் மனைவி சிவகாமி (வயது 80). இவர்களுடைய மகள்களான கலைச்செல்வி, அம்பிகா, இளவரசி, பானுமதி ஆகியோர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். லோகிதாஸ் இறந்துவிட்டதால், சிவகாமி குவாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள குடிசையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து குவாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிந்து, சிவகாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், சிவகாமி தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 14 வயது சிறுவன் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து கொன்று, அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடு மற்றும் 100 ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த சிறுவனிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், நகையை தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறினான். ஏற்கனவே அந்த சிறுவன், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் தந்தையிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சிறுவனை கைது செய்து, பரிசோதனை செய்ததில் அவனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் அரியலூர் கோர்ட்டில் சிறுவனை ஆஜர்படுத்தி, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். சிறுவனின் தந்தைக்கு 8 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story