போர்க்கால அடிப்படையில் தடுப்பு பணிகள்: வரும் நாட்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
போர்க்கால அடிப்படையில் தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் நாட்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்சி,
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று காலை திருச்சி வந்தார். திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான மோட்டார் பொருத்தும் இடம், ஆக்சிஜன் வழங்கும் அறை, கூடுதல் கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் மட்டும் 109 பேர் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்தாலும், இதயநோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட எந்த நோயில் இறந்தாலும், விபத்தில் காயம் அடைந்து இறந்தாலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தால் அவர்களையும் கொரோனாவால் இறந்தவர்களாக தான் அறிவிக்கவேண்டும் என ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டு உள்ளது.
இதன்படி தான் தமிழக அரசு எதையும் மறைக்காமல் வெளிப்படையாக உயிரிழப்பு எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. கொரோனாவை தடுக்க மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக வரும் நாட்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கொரோனாவின் அடுத்த அலையை தடுப்பதற்கு ஒரே வழி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கை கழுவுவது தான்.
அடுத்து எண்ணிக்கை அதிகரிக்குமா? என கேட்பதை விட நாம் களப்பணியை தீவிரப்படுத்தினால் கொரோனா வராமல் தடுக்கலாம். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. 6 மாதமாக அனுபவ ரீதியாக நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நோய் அறிகுறி தெரிந்தவர்கள் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற முன்வரவேண்டும். சித்தா, ஆயுர்வேதா, நேச்சுரோபதி முறையிலும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊக்கப்படுத்தி வருகிறோம். கொரோனா நோயாளிகளை அழைத்து வருவதற்காக கூடுதலாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். தேவைப்பட்டால் முழு கவச வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களையும் வாடகை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாநில அரசின் வழிகாட்டுதல் முறைப்படி காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் 3 பிரிவு ஊழியர்களும் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தமிழகத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் படிப்படியாக இது தொடங்கப்படும். நோய் வந்து விட்டால் எதிர்ப்பை காட்டும் திறனை அறியக்கூடிய ஆன்டிபாடி டெஸ்ட் செய்வதற்கான ஒரு ஆணையை கொள்கை அடிப்படையில் முதல்- அமைச்சர் வழங்கி இருக்கிறார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் எல்லா பரிசோதனைகளையும் ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் செய்து வருகிறோம். இதில் 75 சதவீதம் அரசும், 25 சதவீதம் தனியார்களும் செய்து வருகிறார்கள். பரிசோதனையில் பாசிட்டிவ் ரேட் பத்துக்கு குறைவாக தான் உள்ளது. ஒரு சில இடங்களில் தான் பத்துக்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சி காஜாமலை பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக நடந்து வந்த பரிசோதனை முகாமை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் காஜாமலை காலனியில் நோய் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி டீன் வனிதா, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) லட்சுமி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்ரமணியன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story