தூசி அருகே, ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் வெட்டிக்கொலை - தலைமறைவான மகனுக்கு வலைவீச்சு


தூசி அருகே, ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் வெட்டிக்கொலை - தலைமறைவான மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2020 3:30 AM IST (Updated: 5 Aug 2020 8:09 AM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே ஓய்வுபெற்ற பெண் சத்துணவு அமைப்பாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான அவருடைய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தூசி, 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த கீழ்நாய்க்கன்பாளையம் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் நடராசன். இவரது மனைவி சந்திரா (வயது65). சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சந்திரா கடந்த 25 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

மூத்த மகன் வெங்கடேசன்(43) காஞ்சீபுரத்திலும், 2-வது மகன் ராஜகோபால் (38) சென்னையிலும் வசித்து வருகின்றனர். 3-வது மகன் சந்திரசேகரன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக காஞ்சீபுரத்தில் வசித்து வந்த மூத்த மகன் வெங்கடேசன் மட்டும் தாயார் சந்திராவுடன் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெகுநேரம் ஆகியும் சந்திரா வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில் சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் வசித்து வரும் சந்திராவின் 2-வது மகன் ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த ராஜகோபால் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சந்திரா படுக்கையறையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு கைகளில் வெட்டு காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

தாய் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தூசி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், தடயவியல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ஷாகீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திராவின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் மியாஸ் சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்தூரம் ஓடி நின்று விட்டது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான வெங்கேடசன் நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிகிறது. குடிக்க பணம்தர மறுத்த தாயாரை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து கொலையாளி யார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவாக உள்ள வெங்கடேசனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story