மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் விரக்தி: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை - நாகூர் அருகே பரிதாபம்


மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் விரக்தி: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை - நாகூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 5 Aug 2020 3:45 AM IST (Updated: 5 Aug 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகூர்,

நாகையை அடுத்த நாகூர் அருகே உள்ள வெங்கடகால் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் முருகன்(வயது 21). பட்டதாரியான இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அவர் மாதந்தோறும் சென்னைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ்-ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் முருகனால் சென்னைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை. இந்த நிலையில் முருகனுக்கு மீண்டும் முதுகில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் தன்னை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டார்.

ஆனால் போதிய அளவு பண வசதி இல்லாததால் முருகனை அவரது பெற்றோரால் சென்னைக்கு அழைத்து செல்ல இயலவில்லை. இதனால் முதுகு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட முருகன் நேற்று முன்தினம் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாத விரக்தியில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story