திருப்பூரில் பரிதாபம்: செல்போன் கோபுரம் விழுந்து தொழிலாளி நசுங்கி பலி


திருப்பூரில் பரிதாபம்: செல்போன் கோபுரம் விழுந்து தொழிலாளி நசுங்கி பலி
x
தினத்தந்தி 5 Aug 2020 3:45 AM IST (Updated: 5 Aug 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே செல்போன் கோபுரம் விழுந்ததில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர்,

திருப்பூரில் நேற்று காலை முதல் லேசான மழை தூறலுடன் பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளையில் முறிந்து விழுந்தன. இதற்கிடையில் பல்லடம்- திருப்பூர் சாலையில் நேற்று காலை 11 மணிக்கு ஒரு லாரி திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த சாலையில் தமிழ்நாடு திரையரங்கு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்போன் கோபுரம் ஒன்று பலத்த சத்தத்துடன் சாய்ந்து கொண்டிருந்தது. இதை லாரி டிரைவர் கவனித்ததால், சாமர்த்தியமாக செயல்பட்டு லாரியை நிறுத்தி, விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார்.

ஆனால் இந்த லாரிக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த திருப்பூர் பவானி நகரை சேர்ந்த தொழிலாளி செங்கிஸ்கான் (வயது 54) என்பவர் செல்போன் கோபுரம் சாய்வதை கவனிக்காமல் லாரியை முந்தி சென்றார். அப்போது செல்போன் கோபுரம் செங்கிஸ்கான் மீது விழுந்தது.

இதில் உடல் நசுங்கி செங்கிஸ்கான் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வந்த மோட்டார் சைக்கிளும் நொறுங்கியது. மேலும் செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பம் ஒன்றும், கார் ஒன்றும் சேதம் அடைந்தது.

இது பற்றிய தகவலறிந்ததும் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செங்கிஸ்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. விபத்தில் பலியான செங்கிஸ்கானின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆகும். இவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story