1010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது: மாமல்லபுரத்தைப்போல் மின்னொளியில் ஜொலிக்க உள்ள தஞ்சை பெரியகோவில் - ராட்சத விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரம்


1010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது: மாமல்லபுரத்தைப்போல் மின்னொளியில் ஜொலிக்க உள்ள தஞ்சை பெரியகோவில் - ராட்சத விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 Aug 2020 3:30 AM IST (Updated: 5 Aug 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

1010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தஞ்சை பெரிய கோவில் மாமல்லபுரத்தைப்போல் மின்னொளியில் ஜொலிக்க உள்ளது. அங்கு ராட்சத விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகள் ஆகியும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இந்த கோவில் இருந்து வருகிறது.

இந்த கோவிலில் மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் ஆகியவை உள்ளன. இது தவிர 216 அடி உயரமுள்ள விமான கோபுரமும் அமைந்து உள்ளன. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதிகளும் உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கோவில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இங்கு தினமும் நான்கு கால பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன. மேலும் நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடும் பக்தர்கள் இல்லாமல் நடந்து வருகிறது.

இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட அகழி, பெரியகோட்டைச்சுவர் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் ராட்சத விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவிலின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் மின் இணைப்புகள் பொருத்தி விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

நமது பாரம்பரிய நினைவுச்சின்னத்தை ஒளி வெள்ளத்தில் பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் தற்போது அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து எந்தவித இடையூறும் இல்லாமல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

வழக்கமாக தஞ்சை பெரியகோவில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். அதேபோல மாலை 4 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படும். புராதன சின்னத்தை ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் காணும் வகையில் இந்த விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. அதேபோன்று தஞ்சை பெரியகோவிலும் விரைவில் மின்னொளியில் ஜொலிக்கப்போகின்றன. அதுவும் குறிப்பாக மாலை 6 மணிக்குப்பிறகு நடை சாத்தப்படும் வரை இந்த விளக்குகள் எரிய விடப்படும் என கூறப்படுகிறது.

இருப்பினும் பணிகள் நிறைவடைந்து விளக்குகள் எரியவிடப்பட்ட பின்னர் தான் அது குறிப்பிட்ட நேரம் மட்டும் எரியவிடப்படுமா? அல்லது இரவு முழுவதும் எரியவிடப்படுமா? என்பது தெரிய வரும் என்று தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story