தடுப்புச்சுவரால் வாய்க்கால் நீரோட்டத்துக்கு பாதிப்பு: விவசாயிகள் சாலை மறியல்
தடுப்புச்சுவரால் வாய்க்கால் நீரோட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம்-அரும்பாக்குளம் இடையே பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள வடகுடி பெரிய வாய்க்கால் கரையோரம் சாலையை பலப்படுத்தும் வகையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்புச்சுவரால் வடகுடி வாய்க்காலில் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நன்னிலம்- கும்பகோணம் சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வாய்க்காலின் நீரோட்டத்துக்கு இடையூறாக உள்ள தடுப்புச்சுவரை அப்புறப்படுத்தி, வாய்க்காலை அகலப்படுத்தி மீண்டும் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் மணிமன்னன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜ்மோகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராம.குணசேகரன், ஒன்றிய ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story