கொரோனா நோயாளியிடம் 10 நாள் சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைகள் மீது மதுரை ஐகோர்ட்டில் குற்றச்சாட்டு - அரசு பதில் அளிக்க உத்தரவு


கொரோனா நோயாளியிடம் 10 நாள் சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைகள் மீது மதுரை ஐகோர்ட்டில் குற்றச்சாட்டு - அரசு பதில் அளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2020 3:30 AM IST (Updated: 5 Aug 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளியிடம் 10 நாள் சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வசூலித்ததாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மீது மதுரை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய பதில் அளிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த சக்திகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை, 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு பணம் வசூலித்தன. இதனை தடுக்க கட்டண நிர்ணயம் செய்து, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. இதன்படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றினால் மக்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா நோய் தொற்றினால் மக்களிடையே வீண் பதற்றம் நிலவுகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான இடங்கள் சுத்தமாக வைக்கப்படுவது இல்லை. கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள கொரோனா படுக்கைகள் மற்றும் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல், தங்கும் இடங்களை ஒரு நாளைக்கு 3 முறை சுத்தம் செய்வதுடன், கொரோனா நோய் தொற்றினால் இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்தல்.

மேலும் அரசாணையின்படி, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் தொகையை முறைப்படுத்தவும், கொரோனாவுக்கு ஆளாகாத நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகி, “மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 10 நாட்கள் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியிடம் ரூ.8 லட்சம் ஒரு தனியார் மருத்துவமனை கட்டணமாக வசூலித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.

விசாரணை முடிவில், மனுதாரர் வக்கீல் தனது வாதங்களை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து உரிய ஆவணங்களுடன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story