கோவையில் பலத்த மழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பேரூர்-வேடபட்டி ரோடு துண்டிப்பு


கோவையில் பலத்த மழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பேரூர்-வேடபட்டி ரோடு துண்டிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 5:00 AM (Updated: 5 Aug 2020 4:56 AM)
t-max-icont-min-icon

கோவையில் பெய்த பலத்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பேரூர்-வேடபட்டி ரோடு துண்டிக்கப்பட்டது.

பேரூர்,

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்திலேயே தொடங்கும். ஆனால் இந்தாண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கவில்லை. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் கோவை குற்றால அருவியில் 2 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் போதிய மழை பெய்யாததால் கோவையின் நீராதாரமாக விளங்கும் குளங்களுக்கு தண்ணீர் செல்ல வில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று காலை புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து ஆற்றில் சென்றது.

அதன் அருகே உள்ள ராஜவாய்க்கால் மூலம் கோவையின் நீராதாரங்களான வேடப்பட்டி புதுக்குளம், நரசாம்பதி குளம், கோளராம்பதி குளம் ஆகிய குளங்களுக்கு நேற்று திறந்து விடப்பட்டது. இது போல் குறிச்சி கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரத்துண்டுகளால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. உடனே பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகள் எடுத்து விடப்பட்டது. இதனால் குறிச்சி குளத்துக்கு தண்ணீர் சீராக சென்றது. இது போல் பெருமாள் கோவில்பதி தடுப்பணையும் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நொய்யல் ஆற்றில் போடப்பட்ட தற்காலிக ரோடு தண்ணீரில் மூழ்கியது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், செம்மேடு உக்குளம், பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குளம், கங்க நாராயண சமுத்திரகுளம், பேரூர் பெரியகுளம் உள்ளிட்ட நொய்யல் வழியோர கிராமங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த தண்ணீர் ஆற்றில் வழிந்தோடுவதை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

இதேபோல் நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆடிப்பெருக்கின் போது பேரூர் படித்துறை நொய்யல் ஆறு வறண்டு, பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப் பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பேரூர் நொய்யல் படித்துறையில் நேற்று காலை முதல் படிகளை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நொய்யல் படித்துறையில் பேரூர் -வேடபட்டி இணைப்பு உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. மேலும் போக்குவரத்துக்காக நொய்யல் ஆற்றுக்குள் தற்காலிகமாக ரோடு போடப்பட்டது. அதன் வழியே பேரூர்- வேடபட்டி பகுதிக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிக ரோடு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொண்டாமுத்தூரில் இருந்து போளுவாம்பட்டி செல்லும் மெயின்ரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தென்னை மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, ராஜ வாய்க்கால் வழியே தொண்டாமுத்தூர் செல்லும் வாய்க்கால் ரோட்டில் பலத்த காற்றுக்கு வன்னிமரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நொய்யல் ஆற்றில் பல மாதங்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அதனுடன் சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை தண்ணீர் கலந்து வந்தது. சுண்ணாம்பு காளவாய், பட்டணம் தடுப்பணைகளில் தண்ணீர் நுரையுடன் வெளியேறியது. அது காற்றில் பறந்து வீடுகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்தது. சில இடங்களில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் தண்ணீர் சென்றதால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். வெள்ளலூர் குளத்திற்கு ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் செல்வது தடைபட்டது. உடனே பொதுப்பணித்துறை ஊழியர்கள் வந்து அடைப்புகளை அகற்றினர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலந்தது. மழை காரணமாக குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story