நாகர்கோவிலில், மனைவியுடன் தகராறு; 2 கார்களை எரித்த என்ஜினீயர் - போலீசார் விசாரணை


நாகர்கோவிலில், மனைவியுடன் தகராறு; 2 கார்களை எரித்த என்ஜினீயர் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2020 6:47 AM GMT (Updated: 5 Aug 2020 6:47 AM GMT)

நாகர்கோவிலில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 கார்களை பெட்ரோல் ஊற்றி எரித்த என்ஜினீயரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில், 

நாகர்கோவில் பெருவிளை அருகில் உள்ள கோட்டவிளையைச் சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் (வயது 36), என்ஜினீயர். இவருடைய மனைவி கேஷில்டா மேரி (32). யூஜின் மரிய ஸ்டாலின் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஊர் திரும்பினார்.

இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கேஷில்டா மேரி கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து ஹோலிகிராஸ் நகரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.

ஆனாலும் யூஜின் மரிய ஸ்டாலின் அடிக்கடி மனைவியின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் அவர் அங்கு சென்று மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரம் அடங்காத அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 கார்களில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு கார் முற்றிலும் எரிந்து நாசமாகியது. மற்றொரு காரின் பின்பகுதி முழுமையாக எரிந்தது. இதுகுறித்து கேஷில்டா மேரி ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, எரிந்த கார்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக யூஜின் மரிய ஸ்டாலினை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிக்கப்பட்ட 2 கார்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தகராறில் 2 கார்கள் எரிக்கப்பட்ட சம்பவம் ஹோலிகிராஸ் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story