ராமர் கோவில் பூமி பூஜையின் போது ‘கரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள் ராமரின் துரோகிகள்’ சிவசேனா காட்டம்


ராமர் கோவில் பூமி பூஜையின் போது ‘கரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள் ராமரின் துரோகிகள்’ சிவசேனா காட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2020 6:49 PM GMT (Updated: 5 Aug 2020 6:49 PM GMT)

ராமர் கோவில் பூமி பூஜையின் போது கரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள் ராமரின் துரோகிகள் என்று சிவசேனா கூறி உள்ளது.

மும்பை,

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்துகொண்டார். ராமர் கோவிலுக்காக மறைந்த பால்தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் முன்களத்தில் நின்று போராடியது. தற்போது அந்த கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ராமர் கோவில் கட்ட தனது கட்சி சார்பில் ரூ.1 கோடி வழங்கி உள்ளார். ஆனால் பூமி பூஜைக்கு சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருந்ததாவது:-

அழைக்கப்படவில்லை

ராமர் கோவில் பூமி பூஜை முழு நாடு மற்றும் இந்துக்களுக்கானது. கரசேவகர்களின் தியாகத்தால் நுகரப்பட்ட மண்ணில் இன்று ராமர் கோவில் கட்டப்படுகிறது.

1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்ட சுப்ரீம் கோர்ட்டு, ராமர் கோவில் கட்ட பாதை அமைத்து கொடுத்தது. இந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பூமி பூஜை விழாவுக்கு அழைக்கப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்கு வகித்த சிவசேனா கூட அழைக்கப்படவில்லை. பிரதமர் மோடி ஆட்சியில் சட்ட பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இல்லாவிட்டால் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ராஜ்யசபா எம்.பி. பதவியை பெற்று இருக்க மாட்டார்.

பாபர் மசூதி கமிட்டியை சேர்ந்த இக்பால் அன்சாரி விழாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் 30 ஆண்டுகளாக சட்டபோராட்டத்தை நீட்டித்து கொண்டு சென்றவர். ரஞ்சன் கோகாய் சட்டபோராட்டத்தில் இருந்து ராமரை வெளியே கொண்டு வந்தவர்.

ராமரின் துரோகிகள்

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ராமர் கோவில் கட்டும் போராட்டத்தில் லத்தியால் உதை வாங்கி, அதில் பலர் உயிரை தியாகம் செய்தனர்.

இந்தநிலையில் ராமர் கோவில் பூமி பூஜை தருணத்தில் கரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள், ராமரின் துரோகிகள். இந்த பூமி பூஜையுடன் ராமர் கோவிலுக்கான அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story