ரூ.90 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை ஆந்திர அரசு அறிவிப்பால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி


ரூ.90 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை ஆந்திர அரசு அறிவிப்பால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 Aug 2020 3:30 AM IST (Updated: 6 Aug 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே ரூ.90 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்து இருப்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு பெரிய நீர்த்தேக்க அணையை கட்டி தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்பு இப்பகுதியில் பெய்யும் மழை கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து நல்லாட்டூர், சிவாடா, கனகம்மசத்திரம் வழியாக பூண்டி ஏரியில் கலந்து வந்தது.

இதனால் கொசஸ்தலை ஆறு செல்லும் தமிழக பகுதிகளில் நீர்ப்பிடிப்பு ஏற்பட்டு விவசாயம் செழுமையாக நடந்து வந்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் பஞ்சமின்றி காணப்பட்டது. அதன்பிறகு ஆந்திர அரசு பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கிருஷ்ணாபுரம் தடுப்பு அணையினால் தண்ணீர் தடுக்கப்பட்டது.

இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஏரி, கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் காணப்படும் நிலை ஏற்பட்டது.

ரூ.90 கோடியில் தடுப்பு அணை

மழைக்காலங்களில் கிருஷ்ணாபுரம் அணை நிரம்பி உபரி நீரை அந்த மாநில அரசு கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் காலங்களில் மட்டுமே பள்ளிப்பட்டு பகுதியில் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கிருஷ்ணாபுரம் அணைக்கு 5 கி.மீ.தொலைவில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கத்தரிப்பள்ளி என்ற இடத்தில் ரூ.90 கோடி செலவில் சிறிய அளவிலான தடுப்பு அணை கட்டப்படும் என்று ஆந்திர மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். இந்த அறிவிப்பால் அப்பகுதி தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story