பூம்புகார் தொகுதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா - கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று உறுதி


பூம்புகார் தொகுதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா - கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 Aug 2020 4:45 AM IST (Updated: 6 Aug 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று உறுதியானது.

பொறையாறு,


மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.பவுன்ராஜ். இவர் கடந்த 30-ந் தேதி மயிலாடுதுறையில் நடந்த புதிய மாவட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் நாகை செல்வராசு, மயிலாடுதுறை ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கொரோனா பரிசோதனைக்கு தனது ரத்த மாதிரியை கொடுத்து இருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பவுன்ராஜ் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் கடந்த 3-ந் தேதி மயிலாடுதுறையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே 2 எம்.பி.க்கள் மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பவுன்ராஜ் எம்.எல்.ஏ.வையும் சேர்த்து டெல்டாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், நடிகருமான கருணாஸ் உள்ளார்.

இவருடைய தனி பாதுகாப்பு அதிகாரிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருணாஸ் எம்.எல்.ஏ. திண்டுக்கல் சென்றபோது அங்கு மாநகராட்சி வளாக மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் டாக்டர்களின் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார்.

Next Story