கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி உண்ணாவிரதம் - வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்தது
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திருவாரூர்,
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை ஊழியர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். உயர்தர சிகிச்சை, பாதுகாப்பு உபகரணங்கள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்தது.
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசோக் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சோமசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சண்முகம், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் சங்க நிர்வாகிகள் விஜய்ஆனந்த், சுகுமார், ரவி, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் 397 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story