தஞ்சை மாவட்டத்தில், மத்திய பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி உள்பட 79 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி உள்பட 79 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர், தாலுகா அலுவலக ஊழியர், வங்கி மேலாளர், வங்கி ஊழியர்கள், மாணவர்கள், அரசு மருத்துவமனை நர்சு ஆகியோரும் அடங்குவர்.
தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12 பேரும், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 27 பேரும், பட்டுக்கோட்டை பகுதிகளில் 17 பேரும், திருவிடைமருதூர் பகுதிகளில் 4 பேரும், திருவையாறு, பாபநாசம் பகுதிகளில் தலா 3 பேரும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அடங்குவர். நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 79 பேரையும் சேர்த்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது பெண் மற்றும் 59 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லம் பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 129 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 ஆயிரத்து 476 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் தற்போது 812 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் 38 வயதான கணினி ஆபரேட்டருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story