களக்காடு அருகே கிராமங்களில் சுற்றி திரியும் கரடிகள் பொதுமக்கள் அச்சம்


களக்காடு அருகே கிராமங்களில் சுற்றி திரியும் கரடிகள் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:57 AM GMT (Updated: 2020-08-06T07:27:09+05:30)

களக்காடு அருகே கிராமங்களில் கரடிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 5-க்கும் மேற்பட்ட கரடிகள் அங்குள்ள பொத்தையில் தஞ்சம் புகுந்துள்ளன. பெரிய அளவில் மரங்களோ, உணவோ கிடைக்காத அந்த பொத்தையில் வாழும் கரடிகள் தினமும் ஊருக்குள் புகுந்து சுற்றியுள்ள வயல்வெளிகளில் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்குள் புகுந்த கரடி பல கி.மீ தூரம் ஓடியது. அப்போது விவசாயி ஒருவரையும், வனத்துறை ஊழியரையும் கடித்துக்குதறியது. அந்த கரடியை களக்காடு வனத்துறையினர் மயக்க மருந்து ஊசி செலுத்தி பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விட்டனர். அதன் பின்னரும் கரடிகள் சுற்றுவதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிடித்துச் செல்ல கோரிக்கை

தற்போது விளைநிலங்கள் அறுவடை முடிந்து தரிசுகளாகி வருவதால் கரடிகள் உணவுக்காக பொத்தை அருகே உள்ள சிங்கிகுளம், மலையடி, இந்திராநகர், பெத்தானியா திடியூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அங்கு செல்லும் விவசாயிகள் வயல்வெளிகளில் சுற்றித்திரியும் கரடிகளை மிக அருகில் நின்று செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் உலவ விடுகின்றனர்.

இந்த போக்கு இளைஞர்களிடையே ஒருவித ஆர்வத்தை தூண்டியுள்ளதால் பலர் செல்போனுடன் மலைப்பகுதியை சுற்றி வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

ஆகவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு கரடிகளை கூண்டு வைத்து பிடித்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story