லால்குடியில் சூறாவளி காற்றுக்கு வணிக வளாக கட்டிட தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது - சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
லால்குடியில் சூறாவளி காற்றுக்கு வணிக வளாக கட்டிடத்தின் மேல்தள தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடியில் ரெயில்வே மேம்பாலம் அருகே திருவள்ளுவர் நகர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இந்த வணிகவளாக கட்டிடத்தின் தரைத் தளத்தில் 5 கடைகளும், முதல் தளத்தில் 5 கடைகளும் உள்ளன.
இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும்போது, வணிகவளாக கட்டிடத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டது. மீதம் உள்ள இடத்தில் கட்டிடத்தை பழுது பார்த்து மேல் தளத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று சூறாவளி காற்று அடித்தபோது, கட்டிடத்தின் மேல் தளத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த ஆங்கரை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் எபிநேசன் (வயது 14), சஞ்சய் (13) மற்றும் அங்கு பொருட்கள் வாங்க தந்தை கமலக்கண்ணனுடன் வந்த சிறுமி நிஷாந்தி (12) மற்றும் தரைத்தளத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்யும் கவிதா (20) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் எபிநேசன், சஞ்சய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுபற்றி அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story