மாவட்டத்தில், போலீசார்-அமைச்சு பணியாளர்கள் உள்பட 37 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் போலீசார்-அமைச்சு பணியாளர்கள் உள்பட 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போலீசார், அமைச்சு பணியாளர் என 21 ஆண்களுக்கும், 9 பெண் போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கருப்பம்பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கும் , கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி மற்றும் 40 வயது ஆண், குளித்தலை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் மற்றும் குளித்தலையை சேர்ந்த 37 வயது வாலிபர், மேட்டுமருதூரை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவருக்கும், அண்ணாசாலையை சேர்ந்த 33 வயது பெண் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 37 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்த 375 ஆண்கள், 158 பெண்கள், 13 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் என 556 பேர் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தொளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு போலீசார் அனைவருக்கும் கபசுர குடி நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் குளித்தலை போலீஸ் நிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புகார் கொடுக்க வருபவர்கள் மற்றும் வெளி ஆட்கள் என யாரும் உள்ளே வருவதை தவிர்க்கும் பொருட்டு எச்சரிக்கை பதாகை லைக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பாடிபட்டி, பிள்ளபாளையம், ஆண்டியப்பநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சகிலா தலைமையில் சத்து மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story