புதிதாக டாக்டர்கள் உள்பட 171 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 3 பேர் பலி - மாவட்டத்தில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். 6 டாக்டர்கள் உள்பட 171 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 171 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சிதம்பரம், கடலூர், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், அண்ணாகிராமம், நெய்வேலியை சேர்ந்த 6 டாக்டர்கள், 8 செவிலியர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள், ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், 3 போலீசார், ஒரு அரசு ஊழியருக்கும் பாதிப்பு உறுதியானது.
இவர்களை தவிர 6 கர்ப்பிணிகள், 3 பிரசவித்த தாய்மார்கள், கடலூர் மத்திய சிறையில் உள்ள 7 சிறை கைதிகள், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர், கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 66 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து நெய்வேலி, காட்டுமன்னார்கோவிலுக்கு வந்த 2 பேர், திண்டுக்கல்லில் இருந்து அண்ணாகிராமம் வந்த 2 பேர், திருவாரூரில் இருந்து கடலூர் வந்த 2 பேர், மும்பையில் இருந்து கடலூர் வந்த ஒருவர், குஜராத்தில் இருந்து நெய்வேலி வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,010 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். அதாவது, நல்லூரை சேர்ந்த 65 வயது முதியவர் சளி, காய்ச்சலுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் மங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கும் நோய் தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நல்லூரை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.
மாவட்டத்தில் இன்னும் 2,125 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்ட 1,583 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 223 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 73 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story