எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்போம் - சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டி


எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்போம் - சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2020 10:00 PM GMT (Updated: 2020-08-06T10:09:25+05:30)

தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 20-ந் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

கொரோனா காலத்தில் டீசல் விலை சுமார் ரூ.13 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு கலால்வரியையும், மாநில அரசு மதிப்புகூட்டு வரியையும் உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆலைகள், தொழிற்கூடங்கள் திறக்கப்படாததால் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் 40 சதவீத லாரிகளுக்கு மட்டுமே லோடு கிடைக்கிறது.

கொரோனா காலத்தில் லாரிக்கான காலாண்டு வரியினை ஏற்கனவே 2 முறை செலுத்தி விட்டோம். மூன்றாவது முறைக்கான காலாண்டு வரியினை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். லாரிகள் விபத்துக்களை சந்திக்காத வகையில் எதிரொலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்து உள்ளது. மற்ற மாநில அரசுகள் இந்த ஆணையை கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் தமிழக அரசு பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் தான் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டவேண்டும் என அறிவித்து உள்ளது. ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பதால் ஸ்டிக்கர் விலை பலமடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதேபோல் வேகக்கட்டுப்பாட்டு கருவியினை ஏற்கனவே எங்களது லாரிகளுக்கு பொருத்தி உள்ளோம். ஆனால் தற்போது குறிப்பிட்ட சில நிறுவனங்களில் இருந்து மட்டும் தான் வேகக்கட்டுப்பாட்டு கருவியினை வாங்கி பொருத்த வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் அரசின் இந்த செயல் எங்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.

மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியினை குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வாகன கடனுக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும். கொரோனா காலத்தில் வாகனங்கள் ஓடாததால் சாலை விபத்துக்கள் வெகுவாக குறைந்து உள்ளது. சுமார் 15 சதவீதம் வரை உயிரிழப்புகள் குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்கி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு லாரிகளுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தலை 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.

மத்திய அரசு வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம், தேசிய அனுமதி சான்று, வாகனம் புதுப்பித்தல் சான்று ஆகியவற்றை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும். இன்னும் இரு வார காலத்தில் தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற 20-ந் தேதி சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி, லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story