தர்மபுரியில், வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் புகழேந்தி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் டியூக் பொன்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ருத்ரய்யன், நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கொரோனா ஊரடங்கின்போது உயிரிழந்த வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியின்போது வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளான வருவாய்த்துறை அலுவலர்கள், பேரிடர் மேலாண்மை அலுவலர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும்.
கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு உயர்தர பாதுகாப்பு மற்றும் நோய்தடுப்பு கருவிகள் வழங்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story