2 நாள் விடுப்பு போராட்டம் தொடங்கியது: குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதம் - கொரோனா தடுப்பு பணிகள் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டத்தில் குதித்தனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதனால் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
நாகர்கோவில்,
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த இழப்பீடு தொகை ரூ.50 லட்சத்தை தாமதமின்றி வழங்கிட வேண்டும். கொரோனா பணியின்போது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு உயர்தரமான சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.
அனைத்து அலுவலர்களுக்கும் உயர் ரக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கினர்.
இதேபோல் குமரி மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், தேர்தல் பிரிவு அலுவலகங்கள் போன்றவற்றில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. சில அலுவலகங்கள் பூட்டிக்கிடந்தன.
இதனால் மக்கள் சான்றுகள் பெற முடியாமல் தவித்தனர். அதேபோல் கொரோனா கால சோதனைச்சாவடி பணிகள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கொரோனா கவனிப்பு மையங்கள், தனிமைப்படுத்தும் முகாம்கள் போன்றவற்றில் பணியாற்றி வந்த வருவாய்த்துறை அலுவலர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்ற துறை அதிகாரிகளை அங்கு பணியமர்த்தி பணிகளை மேற்கொண்டது.
அதே சமயத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட தலைவர் வினோத் கூறுகையில், குமரி மாவட்ட வருவாய்த்துறையில் 379 பேர் பணியாற்றி வருகிறார்கள். அலுவலக உதவியாளர்கள் அந்தஸ்தில் பணியாற்றுபவர்கள், ஒரு துணை தாசில்தார், ஒரு உதவியாளர் என மொத்தம் 6 பேர் மட்டுமே பணிக்கு சென்றிருக்கிறார்கள். மற்ற அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் கொரோனா பணிகள், வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் 2-வது நாளாக நாளையும் (அதாவது இன்று) நடக்கிறது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story