அவினாசி பகுதியில், சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்த மரங்கள் - மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு


அவினாசி பகுதியில், சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்த மரங்கள் - மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2020 12:50 PM IST (Updated: 6 Aug 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் நேற்று காலை வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

அவினாசி, 

அவினாசி பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 5 மணி முதல் 7 மணிவரை குளிர்ந்த காற்று வீசியது. அதை தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலைவரை தொடர்ந்த சூறாவளி காற்று சுழன்று வீசியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சாலையோரம் இருந்த ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்தன.

சூளை பகுதி, சகானா கார்டன், மங்கலம் ரோடு, அவினாசி வ.உ.சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரம் இருந்த பழமைவாய்ந்த புங்கன், வாதமரம் , தீக்குச்சி மரம், மற்றும் அவினாசிலிங்கம்பாளையத்தில் இருந்த 70 ஆண்டு பழமைவாய்ந்த வேப்பமரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்தது.

மேலும் அவினாசி சிவசண்முகம் வீதியில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தது. அப்போது மின் கம்பிகள் ரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் அந்த வழியாக செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவினாசி மங்கலம் ரோட்டில் தாமரைக்குளக்கரையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்து மின்கம்பம் உடைந்தது. மங்கம் ரோட்டில் சுந்தரமூர்த்தி நாயனார் கோவில். வளாகத்தில் இருந்த வேப்பமரம் சாய்ந்து மதில்சுவர் மீது விழுந்ததில் சுவர் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ரோட்டில் மரம் சாய்ந்ததால் அவினாசி - சேவூர் ரோட்டில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தினர் ரோட்டில் கடந்த மரத்தை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து தொடங்கியது. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் அவினாசியில் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரம் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சில வீடுகளின் முன்வராண்டாவில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடம், சிறிய பாத்திரங்கள் பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டன. அவினாசி பகுதியில் இதுவரை இல்லாத அளவு சூறாவளி காற்று வீசி ஒரேசமயத்தில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Next Story