அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் சாவு


அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 7 Aug 2020 2:11 AM IST (Updated: 7 Aug 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி,

புதுவை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 48). கொத்தனார். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் மதுகுடிக்கும் பழக்கமுடைய குப்புசாமிக்கு மதுகுடிக்க போதிய பணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி தனது மகன் அருண்குமாரிடம் மதுகுடிக்க பணம் வாங்கிக் கொண்டு வெளியில் சென்றார். பின்னர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் சாப்பிடுவதற்காக எழுப்பியபோது திடீரென குப்புசாமி வாந்தி எடுத்தார். இதுபற்றி விசாரித்தபோது அதிக போதை வரும் என்பதற்காக மதுபானத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்ததாக தெரிவித்தார்.

பரிதாப சாவு

உடனே அவரை புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், ஏட்டு கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story