திருவையாறில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: நாளை முதல் 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு
திருவையாறில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, நாளை முதல் 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவையாறு,
திருவையாறில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விளாங்குடி கிராமத்தை சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது.
முகாசாகல்யாணபுரம், செம்மங்குடி, மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, மருவூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர், வீரசிங்கம்பேட்டையில் 4 பேர், பெரமூர், திருவையாறு கிழக்கு, திருவையாறு மேற்கு ஆகிய இடங்களில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், திருவையாறு பேரூராட்சி செயல் அதிகாரி ராஜா மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், சுகாதார செவிலியர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதிகள் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். திருவையாறு தெற்குவீதியில் கொரோனா தொற்றால் தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள 2 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருவையாறு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருவையாறு பேரூராட்சி அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் நடந்தது. இதில் பேரூராட்சி செயல் அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகள், காய்கறி வியாபாரிகள், மீன், கோழி, ஆட்டிறைச்சி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவையாறு பேரூராட்சியில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு செய்யவும், 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story