ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு


ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 7 Aug 2020 7:26 AM IST (Updated: 7 Aug 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

ஏற்காடு,

ஏற்காட்டில் மாவட்ட கலெக்டர் ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் ஏற்காடு, ஒண்டிக்கடை பகுதியில் இருந்து லேடீஸ் சீட் பகுதி வரை ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலை பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஏற்காடு ஒன்றிய அலுவலக எதிரில் அமைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் அந்த ஆலையையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் ஏற்காடு ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் சாக்கடை கழிவுநீர் ஏரியில் கலப்பது உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டார். பின்னர் ஏற்காடு ஏரியின் நீர்வரத்து பகுதிகளில் உள்ள புதர் செடிகள் உள்ளிட்டவைகளை அகற்ற வேண்டும் என்றும், ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றுவதற்கான திட்ட அறிக்கைகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமும், ஒன்றிய அலுவலகம் மூலமும் வழங்க கோரினார்.

மேலும் ஏற்காட்டில் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில் நாவல், பேரிக்காய், பலா உள்ளிட்ட மரங்களை வளர்க்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் அருள் ஜோதி அரசன், தாசில்தார் ரமணி, வட்டார வளர்ச்சி குணசேகர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனிடையே தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் புஷ்பராணி, ஒன்றிய கவுன்சிலர் கோகிலா ஆகியோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சேர்வராயன் கோவில் நிலத்தை வனத்துறைக்கு ஒதுக்க வேண்டாம் என்றும், அதில் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கட்டிடங்கள் கட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story