குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்: கலெக்டர் தகவல்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் www.udyamregistration.gov.in என்ற இணையதளத்தில் சுய உறுதி மொழியுடன் ‘உத்யம் பதிவு’ செய்து கொள்ளலாம். இந்த இணையதளம் மூலம் பெறப்படும் சான்றிதழ் ‘உத்யம் பதிவு சான்றிதழ்’ என்றும், இந்த பதிவு எண் ‘உத்யம் பதிவு எண்’ என்றும் அழைக்கப்படும்.
புதிய நிறுவனங்களுக்கு சுய உறுதிமொழியின் அடிப்படையில் எந்திர தளவாட மதிப்பு மற்றும் விற்றுமுதல் மதிப்புகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் முனைவோர் ஒப்புகை பதிவு-2, உத்யோக் ஆதார் மெமோரண்டம் ஆகிய முறைகளில் பதிவு செய்த நிறுவனங்கள் ‘உத்யம் பதிவு இணையதளம்’ மூலம் 31-3-2021 தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த மாதம் 30-ந் தேதிக்கு முன்பு பெற்ற உத்யோக் ஆதார் மெமோரண்டம் மற்றும் தொழில் முனைவோர் ஒப்புகை பகுதி-2 ஆகியன 31-3-2021 வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.
எந்த ஒரு தொழிற்சாலையும் ஒரு ‘உத்யம்’ பதிவுக்கு மேல் பதிவு செய்யக்கூடாது. மேலும், விவரங்களுக்கு உத்யம் இணையதளம் அல்லது ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story