சிவில் சர்வீசஸ் தேர்வில் பரமக்குடி பெண் வேளாண்மை அதிகாரி தேர்ச்சி


சிவில் சர்வீசஸ் தேர்வில் பரமக்குடி பெண் வேளாண்மை அதிகாரி தேர்ச்சி
x
தினத்தந்தி 7 Aug 2020 11:31 AM IST (Updated: 7 Aug 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 559-வது இடம் பிடித்த பரமக்குடி பெண் வேளாண்மை அதிகாரி, மக்களுக்கு தொண்டாற்றுவதே எனது கடமை என்றார்.

பரமக்குடி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் முன்னூர் ஊராட்சியில் உள்ள ஆதியப்பகவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகள் அபிநயா (வயது 27). இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2015-ம் ஆண்டு வேளாண்மை அலுவலராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியில் சேர்ந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதினார். பின்னர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் மெயின் தேர்வை எழுதினார். கடந்த பிப்ரவரி மாதம் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவில், அபிநயா அகில இந்திய அளவில் 559-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.

இதுகுறித்து அபிநயாவிடம் கேட்டபோது, இந்த அளவிற்கு படித்ததற்கு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் காரணம். மேலும் எனது அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய 3 பேருமே எனது வெற்றிக்கு முழுக்காரணம். மக்களுக்கு தொண்டான்றும் பணி செய்வதே எனது கடமை, என்றார்.

நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த அபிநயா, ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்தார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை க.பரமத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் பள்ளியிலும் படித்தார். பின்னர் கோவை வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி. அக்ரி படித்துள்ளார். இவருடைய தாய் பெயர் சிவகாமி, அண்ணன் பெயர் விவேகானந்தன்.

அபிநயா, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னை சென்று முன்னாள் மேயர் சைதை.துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story