திருச்சி நகரில் விபத்துக்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல தனி பாதை: மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி


திருச்சி நகரில் விபத்துக்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல தனி பாதை: மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி
x
தினத்தந்தி 8 Aug 2020 5:09 AM IST (Updated: 8 Aug 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகரில் விபத்துக்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு தனி பாதை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாநகர காவல் துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 67 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 பேர் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். இதில் முதல் கட்டமாக 20 போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணி பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்கள் 20 பேருக்கும் பேரீட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் மற்றும் கையுறை, முககவசங்கள், கிருமி நாசினி திரவம் அடங்கிய தொகுப்பினையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகர காவல் துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னாசி இறப்பிற்கு கொரோனா தொற்று காரணம் இல்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைவரும் கவனமாக செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

திருச்சி பெரிய கடைவீதியில் ஊரடங்கு தளர்வை மீறி அதிக அளவில் மக்கள் கூடுவதாக புகார்கள் வந்து உள்ளன. எனவே பொதுமக்கள் நலன்கருதி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டும், நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும் ஆகஸ்டு மாதம் முழுவதும் சனிக்கிழமை தோறும் (8, 15, 22, 29 ஆகிய தேதிகளில்) காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திருச்சி பெரியகடைவீதியில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனங்கள் மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள் சென்று வரலாம். சோதனை சாவடிகளில் உள்ள போலீசாரிடம் இ-பாஸ் வைத்து இருப்பவர்களின் கியூ.ஆர்.கோர்டை நன்றாக பரிசோதிக்கும்படியும், அதில் முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருச்சி நகரில் 80 சதவீத விபத்துக்கள் இரு சக்கரவாகனங்களினால் தான் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை கட்டுப்படுத்த முக்கியமான 4 சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்காக தனி பாதை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி (சட்டம் ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) ராமச்சந்திரன் உடன் இருந்தனர்.


Next Story