புகளூரில் காகித நிறுவனத்தின் 2-ம் அலகு விரிவாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள் தலைமையில் நடந்தது


புகளூரில் காகித நிறுவனத்தின் 2-ம் அலகு விரிவாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 8 Aug 2020 5:47 AM IST (Updated: 8 Aug 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

புகளூரில் காகித நிறுவனத்தின் 2-ம் அலகு விரிவாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.

கரூர், 

கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு விரிவாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விரிவாக்கப்பணிகள் குறித்தும், விரிவாக்க பணிகளுக்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஆலையில் என்னென்ன வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிறுவனத்தின் சார்பில் இலவசமாக கல்வி பயிலும் மாணவர்களுக்காக, மொத்த கல்வி கட்டணமான ரூ.12 லட்சத்து 35 ஆயிரத்து 625-க்கான காசோலையை அமைச்சர் எம்.சி.சம்பத் பள்ளியின் முதல்வரிடம் வழங்கினார். மேலும் வேட்டமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட அம்மா பூங்காவை மேம்படுத்தும் விதமாக நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகனிடம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அடர்வனம் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் காகித நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் 110 வகையிலான சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அடர்வனத்தை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளில், காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா, டி.ஜி.பி. மற்றும் காகித நிறுவனத்தின் முதன்மை விழிப்புணர்வு அதிகாரி நஜ்மல் ஹோதா, செயல் இயக்குனர் (இயக்கம்) எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன் மற்றும் முதன்மை பொது மேலாளர் (அடுக்கு காகித அட்டை) எஸ்.குஷால் பால்சிங், முதன்மை பொது மேலாளர் (வணிகம் மற்றும் மின்னியல், கருவியியல்) பாலசுப்பிரமணியன், முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன், க.பரமத்தி ஊராட்சி ஒன்றயக்குழு தலைவர் மார்க்கண்டேயன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், விவேகானந்தன் மற்றும் காகித நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story