பிளஸ்- 2 பொதுத் தேர்வு முடித்த மாணவர்களுக்காக உயர் கல்வி குறித்த கையேடு - கலெக்டர் வெளியிட்டார்
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பது குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிளஸ் -2 பொதுத் தேர்வு முடித்த மாணவர்களுக்கான ‘கையேடு- 2020’ மாவட்ட நிர்வாகம் மூலம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் பிளஸ் -2 முடித்த மாணவர்கள் அடுத்து எந்த பாடத்தை தேர்வு செய்து மேல்படிப்பு படிக்கலாம், அதன் மூலம் எந்த வேலைக்கு செல்லலாம் போன்ற விபரங்கள் அடங்கி உள்ளது.
இந்த கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் ராஜேந்திரன், பள்ளிகள் துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு கையேட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கையேடு தற்போது 10 ஆயிரம் பிரதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் நூலகங்களில் கையேடு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் தங்கள் மேல்படிப்பு தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். நடப்பாண்டில் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அந்த கையேடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இணைய வழி
மேலும் கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் தற்போது மூடப்பட்டு உள்ளது. நடப்பாண்டிற்கான பாடங்கள் மாணவர்களுக்கு இணைய வழி மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 320 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 13ந் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்விற்காக படித்து வரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஆகஸ்டு மாதம் இறுதியில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆன்லைனில் மாதிரி தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story