மாவட்டத்தில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ரவுண்டானா அருகில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 300 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டன. இதில் மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், நகர செயலாளர் நவாப், முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. மாநில விவசாய அணி சார்பில், கருணாநிதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களையும், செவிலியர்களையும் கவுரவித்து, அவர்கள் 500 பேருக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநில விவசாய அணி துணைத் தலைவர் டி.மதியழகன் தலைமை தாங்கினார்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், நகர செயலாளர் நவாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி தளவாய்ப்பள்ளி கிராமத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏழை, எளிய மக்கள், துப்புரவு பணியாளர்கள் 65 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், அவைத் தலைவர் கிருஷ்ணன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமார், முனித்தினம், நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ், துணை தலைவர் சுப்பிரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story