கிராம பணிகளை நிறைவேற்றும் அதிகாரம் கோரி ஊராட்சி தலைவர்கள் வழக்கு - மதுரை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கிராம பணிகளை நிறைவேற்றும் அதிகாரம் கோரி ஊராட்சி தலைவர்கள் வழக்கு - மதுரை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2020 10:45 AM IST (Updated: 8 Aug 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

கிராம பணிகளை நிறைவேற்றும் அதிகாரம் கோரி ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்த வழக்கில், மதுரை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனை சேர்ந்த கலியுகநாதன் உள்பட 29 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு பஞ்சாயத்து விதிகளின்படி கிராம பஞ்சாயத்துகளுக்கு உள்பட்ட பணிகளை கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகத்தான் நடத்த வேண்டும். முறைப்படி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கிராமத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் பணிகள் அனைத்தும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவே விடப்படும்.

இதற்கிடையே கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற தாமதம் ஆனதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக செயல்பட்டு, கிராம பஞ்சாயத்து பணிகளை கவனித்து வந்தனர்.

தற்போது கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் முடிந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி தலைவர்கள் பொறுப்பேற்றனர். ஆனாலும் தற்போது வரை கிராம பஞ்சாயத்து பணிகளுக்கான டெண்டர் பணிகள் கூடுதல் மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டு, பேக்கேஜ் டெண்டர் முறையில் விடப்படுகின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. கிராமத்தின் செயல் தலைவர்களாக இருக்கும் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கே கிராமத்தின் தேவைகள் குறித்து தெரியும். எனவே கிராம பஞ்சாயத்து பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விடுவதற்கு தடை விதிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு டெண்டர் பணிகளை நடத்தும் அதிகாரத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story