தேவகோட்டை அருகே பட்டதாரி வாலிபர் குத்திக்கொலை


தேவகோட்டை அருகே பட்டதாரி வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2020 11:39 AM IST (Updated: 8 Aug 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்த பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்து பகுதியில் திராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர், சுப்பிரமணி. அவருடைய மகன் சக்திவேல் (வயது 24). பி.பி.ஏ. பட்டதாரி. வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து வந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மணிவேல் (25). இவர் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவிலும் வீட்டில் தகராறு செய்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சக்திவேல் மொட்டை மாடியில் நின்று சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மணிவேல், கத்தியை எடுத்துச் சென்று சக்திவேலை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரியவருகிறது. சக்திவேல் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் ரத்தவெள்ளத்தில் சக்திவேல் அங்கு பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவேகம்பத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள காட்டுப்பகுதியில் நின்றிருந்த மணிவேலை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் விசாரணையில், சக்திவேலுக்கும் மணிவேலுக்கும் சிறுவயதில் இருந்தே பிடிக்காதாம். மேலும் மணிவேலுவின் தங்கையை சக்திவேல் காதலித்து வந்துள்ளார். இதனால் அவரை மணிவேல் கண்டித்துள்ளார். இதனாலும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறை வேடிக்கை பார்த்ததால் மணிவேல் ஆத்திரம் அடைந்து, சக்திவேலை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

கைதான மணிவேலை தேவகோட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story