கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி


கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 8 Aug 2020 11:53 AM IST (Updated: 8 Aug 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு திரும்பிய போது கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

துடியலூர்,

நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு திரும்பிய போது கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்தவர் கார்த்திக் ராஜூ (வயது 21). இவர் கடந்த 3 மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் ஹரி (21). இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் இந்திரநேசன் (23). தனியார் நிறுவன ஊழியர். வடமதுரையை சேர்ந்தவர் மணிகண்டன் (22). ராமசாமி ரோட்டை சேர்ந்தவர் பிரிஜாஸ் (23). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 5 பேரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள்.

இவர்கள் 5 பேரும், கல்லூரியில் படிக்கும் மற்றொரு நண்பரான கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவரின் பிறந்தநாளை கொண்டாட அவருடைய வீட்டுக்கு காரில் சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் அவர்கள், வெங்கடேசின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் அதிகாலை 2 மணியளவில் இந்திரநேசன் உள்பட 5 பேரும் காரில் ஆனைக்கட்டிக்கு, புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். காரை மோகன் ஹரி ஓட்டினார். கோவை அருகே தடாகம் ரோடு காளையனூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில், டமார்... என்று பயங்கர சத்தத்துடன் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது சின்னதடாகத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ஒரு லாரி டிரைவர், விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் கடப்பாரையால் நெம்பி காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை மீட்க முடியவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இதையடுத்து காருக்குள் சிக்கிய 5 பேரையும் ஒரு மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.

இதில் கார்த்திக் ராஜூ, மோகன் ஹரி, இந்திரநேசன், மணிகண்டன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரிஜாஸ்சை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் இந்திரநேசன் வீட்டுக்கு ஒரே மகன் ஆவார். அவருடைய பெற்றோர் தனது ஒரே மகனை இழந்து விட்டோமே என்று கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இது குறித்து போலீசார் கூறும்போது, விபத்துக்குள்ளான காரில் மதுபாட்டில்கள் கிடந்தது. எனவே அவர்கள் மது அருந்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது என்றனர்.


Next Story