தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் தங்க முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் தங்க முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
கோவை,
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்க முகாம்களை தயார் நிலையில் வைக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
மேட்டுப்பாளையம், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றில் செல்வதை எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
பில்லூர் அணைக்கு நீராதாரமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது அணையின் பாதுகாப்பு கருதி 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பில்லூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 88 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது அந்த அளவிற்கு நீர்வரத்து இல்லை என்ற நிலையிலும், அனைத்து பகுதிகளிலும், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர், தீயணைப்புத்துறை, காவல்துறை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும்போது, கரையோரங்களில் மணல் முட்டைகளை தயார்நிலையில் வைக்கவும், பொதுமக்களுக்கு தண்டோரா, வாகனங்கள் மூலம் பிரசாரம், தொலைகாட்சி மற்றும் ஊடகம் உள்ளிட்டவற்றின் வாயிலாக முறையான எச்சரிக்கை விடுக்கவும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக, சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட முகாம்களை தயார் நிலையில் வைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் தாழ்வான பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும், ஆறு, ஏரி, கண்மாயில் குளிப்பதனை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குடிநீரினை காய்ச்சி குடிக்கவேண்டும். முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் அனைத்து குளம் மற்றும் குட்டைகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதன் விளைவாக, நீர்நிரம்பி வருகின்றன. மேலும், பருவமழை இயற்கையின் கொடை என்ற போதிலும், மழையால் பொதுமக்கள் எவரும் பாதிக்காத வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story