தேனி மாவட்டத்தில் மேலும் 4 பேரின் உயிரை குடித்த கொரோனா
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும், பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 837 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருந்தது. அவர்களில் 115 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த சின்னமனூரை சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர், தேனி காமராஜர் லைன் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர், பெரியகுளம் அருகே உள்ள நல்லகருப்பன்பட்டியை சேர்ந்த 62 வயது மூதாட்டி, பெரியகுளத்தை சேர்ந்த 57 வயது நபர் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 119 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல், கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த கம்பத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் முன்பே நேற்று உயிரிழந்தார்.
இதற்கிடையே தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை, கூடலூர், போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு போலீஸ்காரர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 351 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 188 ஆக அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 300 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர்.
இதுவரை 4,344 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story