கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை


கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை
x

தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் மூணாறு உள்ளது.


தேனி, 

‘கடவுளின் தேசம்’ என்று வர்ணிக்கப்படும் கேரளாவின், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது மூணாறு. தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் மூணாறு உள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலை தோட்டங்கள், உயர்ந்த மலைகளில் கம்பீரமான மரங்கள், தேயிலை தோட்டங்களுக்கு இடையே சிறியதும், பெரியதுமான அணைகள் இவை மூணாறின் தனி அடையாளம். சர்வதேச சுற்றுலாதலமாக திகழும் மூணாறு கோடைகால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். காலை, மாலையில் பனிச்சாரலுடன் இடம் பெயரும் மேகங்கள், அவை நிரப்பிச் செல்லும் குளிர் ஆகியவை தேனிலவு தம்பதிகளை மூணாறை நோக்கி கவர்ந்திழுக்கிறது. கண்கவரும் பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள், படகு சவாரி, மலையேற்றப் பயிற்சி என மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சுற்றுலா இடமாக மூணாறு திகழ்கிறது.

மூணாறுக்கும், தமிழர்களுக்கும் நூற்றாண்டை கடந்த பிரிக்க முடியாத பந்தம் உண்டு. அங்கு வாழும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மூணாறில் தேயிலை தோட்டங்கள் அமைத்த காலத்திலேயே தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். பல தலைமுறைகளாக தமிழர்கள் பல வலிகளை தாங்கியும், பேரிடர்களை எதிர்கொண்டும் தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

நிலமற்ற உழைக்கும் மக்களாக ஆயிரக்கணக்கானோர் மூணாறு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்றனர். இன்றளவும் ஏராளமான தேயிலை தோட்டங்களில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பழைய குடியிருப்புகளில் தான் தமிழர்கள் வசித்து வருகின்றனர். சில இடங்களில் தகரம் வேயப்பட்ட தற்காலிக வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். இதனால், மூணாறில் இயற்கை பேரிடர் நிகழ்ந்தால் உயிரையும், உடைமைகளையும் அதிகம் இழப்பது தமிழர்களாகவே உள்ளனர். அந்த வகையில் தான் நேற்று நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற சோகம் மீண்டும் தொடராமல் தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த ஊர் எதுவென்று கூட தெரியாமல் பல தலைமுறைகளாக மூணாறில் வாழும் தமிழர்களுக்கு சொந்த வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். இதேபோல், தேயிலை தோட்டங்களில் மழையை தாக்குப்பிடிக்காத பழமையான வீடுகளை கணக்கிட்டு அங்கு தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story