கும்பகோணத்தில், கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கும்பகோணத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் மடவிளாகம்- பெரிய தெரு இடையே ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் அமைக்க கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. கும்பகோணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாரங்கபாணி கோவில் சன்னதி பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.
இந்த பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதாக கூறி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கொரோனா சிகிச்சை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் விஜயன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி ஆகியோர் இந்த பகுதியில் அமைய உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு கொரோனா சிகிச்சை மையத்தை அந்த பகுதியில் அமைக்க கூடாது என கூறினர்.
அப்போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனியார் மருத்துவமனையோடு இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகே இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த மையம் செயல்பட தொடங்கும் என பொதுமக்களிடம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். ஆனால் கொரோனா சிகிச்சை மையத்தை இந்த பகுதியில் அமைக்க கூடாது என கூறி பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களின் கருத்தை ஏற்காமல் சிகிச்சை மையத்தை அமைத்தால் போராட்டம் நடத்தப்படும் என கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் லெட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனியார் மருத்துவமனையோடு இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சிகிச்சை மையம் செயல்பட தொடங்கும். இங்கு வரும் கொரோனா நோயாளிகள் உரிய பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். எனவே பொதுமக்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story