திருவாரூர் மாவட்டத்தில், பிளாஸ்மா சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை கூடம், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
இதையடுத்து மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், நோய் தடுப்பு பணியில் முனைப்புடன் பணியாற்ற அறிவுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,716 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் ‘இ-சஞ்சீவினி’ எனும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 32 ஆயிரத்து 870 பேர் ஆன்லைன் மருத்துவ சிகிச்சை மூலம் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவில் தமிழகம் தான் இந்த திட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் யாரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனை செய்யப்படாமல் விடுபட்டு விட்டால் நோய் பரவல் ஏற்படும் என்பதற்காக பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயர்தர மருந்துகளுடன் சேர்த்து சித்த மருத்துவம், யோகா போன்ற ஒருங்கிணைந்த மருத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 3,700 கர்ப்பிணிகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எந்தவித நோய் தொற்றும் பாதிக்காத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்படும். பொதுமக்களுக்கு மறுசுழற்சி செய்யும் வகையிலான முக கவசத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய பின்னர் 15 ஆயிரம் டாக்டர்கள், 4,500 நர்சுகள், 2,000 டெக்னீசியன்கள் நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றுக்கான காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்பட்டால் பொதுமக்கள் தயங்காமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆய்வின்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story