பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது
பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி வெங்கட்டா நகர், லாஸ்பேட்டை, கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு பூட்டிக்கிடக்கும் வீடுகளில் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சுரேசை பெரியகடை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
காலாப்பட்டு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து புதுவை நகர் பகுதியில் பகலில் நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இதேபோல் லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதியில் நடந்த கொள்ளைகளிலும் சுரேசுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாகவும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காதலி, கூட்டாளி
இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவங்களில் சுரேசுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கூட்டாளியான காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் சுரேசின் காதலி கங்கா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் கொள்ளையடித்த நகைகளை சுரேஷ் கொடுத்து இருந்ததாகவும் அதில் 18 பவுன் நகையை சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருவரும் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேசின் காதலி உள்பட 2 பேரையும் போலீசார் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரும் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சுரேசும் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் அடகு வைத்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story