தமிழகம் முழுவதும் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97 கோடி நிவாரணம் - அமைச்சர் சரோஜா பேட்டி


தமிழகம் முழுவதும் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97 கோடி நிவாரணம் - அமைச்சர் சரோஜா பேட்டி
x
தினத்தந்தி 9 Aug 2020 3:45 AM IST (Updated: 9 Aug 2020 7:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.97 கோடி வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்களின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. தமிழக அளவில் கொரோனா தடுப்பு பணியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தொற்று அதிகம் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 28,500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டு இதுவரை 22 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.133 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வரை ரூ.97 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் நேரடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

கோர்ட்டு உத்தரவின்படி சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவர்களுக்கு முட்டை வழங்க முதல்-அமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே உலர் உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் முட்டையை எப்படி வழங்குவது என்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து வினியோகிக்கப்படும். பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நலப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story