சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 10 பேர் பரிதாப சாவு


சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 10 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 9 Aug 2020 4:15 AM IST (Updated: 9 Aug 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் உடல்நலம் குறைவால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அந்த மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்ப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி கணபதிநகரை சேர்ந்த 62 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இங்கு நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் சேந்தமங்கலத்தை சேர்ந்த 55 வயது ஆணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,350-ஐ கடந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதே போல சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்டரஅள்ளி பகுதியை சேர்ந்த 53 வயது ஆண் மற்றும் ஜெகதேவி அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்த 38 வயது பெண் மற்றும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓசூர் டி.வி.எஸ். நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

மேலும் ஓசூரை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Next Story