சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: தென்காசியில் இருந்து நெற்கதிர்கள் அச்சன்கோவிலுக்கு அனுப்பப்பட்டன


சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: தென்காசியில் இருந்து நெற்கதிர்கள் அச்சன்கோவிலுக்கு அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 9 Aug 2020 2:22 AM GMT (Updated: 9 Aug 2020 2:22 AM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக தென்காசியில் இருந்து நெற்கதிர்கள் அச்சன்கோவிலுக்கு அனுப்பப்பட்டன.

தென்காசி, 

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் கேரள மாநிலம் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்கள் உள்ளது. இங்குள்ள நிலப்பரப்பில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைபுத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர்களுடன் 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினரும், அச்சன்கோவில் ஆபரண பெட்டி வரவேற்பு குழுவினரும் இணைந்து சபரிமலைக்கு எடுத்து செல்வார்கள்.

நெற்கதிர்கள்

நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும் வாகனத்திற்கு கோட்டை வாசலில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் முன் தமிழக-கேரள பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள். ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின்பு சபரிமலைக்கு நெற்கதிர்கள் வாகனத்தில் செல்லும். சபரிமலை நிறைபுத்தரி பூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

இந்த வருடம் கொரோனா பிரச்சினை காரணமாக பண்பொழியில் உள்ள வயல்களில் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் தஞ்சாவூரில் இருந்து நெற்கதிர்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் கொரோனா காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்கு அனுமதி இல்லை. எனவே இந்த நெற்கதிர்களை அச்சன்கோவில் திருவாபரணபெட்டி கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன் தலைமையில் தென்காசி அக்ரோ பாபு, மன்னார்குடி குருமூர்த்தி ஆகியோர் அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலின் ஊழியர்கள் பிரமோத், முருகன் மற்றும் முன்னாள் கோவில் கமிட்டி தலைவர் சத்தியசீலன் ஆகியோர்களிடம் வழங்கினார்கள்.


Next Story