திருச்சியில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருச்சியில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2020 10:15 PM GMT (Updated: 9 Aug 2020 4:04 AM GMT)

திருச்சியில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

தொழிலாளர் சட்டங்களை முடக்கக்கூடாது. மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். பொது முடக்கத்தால் வருமானம் இழந்துள்ள தொழிலாளர் அனைவருக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 5 மாதங்களுக்கு ரூ.37,500 வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட பி.எஸ்.என்.எல். டெண்டரை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று காலை தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், துணைத்தலைவர் ராஜூ நடேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சுரேஷ், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் துரைராஜ், எச்.எம்.எஸ். மாநில நிர்வாகி ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுபோல் திருவெறும்பூர் அனைத்து ஆட்டோ டிரைவர்கள் சங்கங்களும் ஒன்றாக இணைந்து சி.ஐ.டி.யூ. ஒன்றிய ஆட்டோ டிரைவர்கள் சங்க செயலாளர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கி தொழிற்சாலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

எச்.ஏ.பி.பி. தொழிற்சாலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற் சங்க கூட்டு குழு நிர்வாகிகள் பிரபாகரன், சத்தியவாகீசன், அலெக்சாண்டர், மனோகரன், இரணியன், ரகுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், காட்டூர், பொன்மலை, மார்க்கெட், ஸ்ரீரங்கம், உறையூர் குறத்தெரு, டோல்கேட், ஏர்போர்ட், போக்குவரத்து டெப்போக்கள், ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story