ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று உறுதி: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது - மேலும் 2 மூதாட்டிகள் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. மேலும் 2 மூதாட்டிகள் இறந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நாளுக்குநாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 955 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 954 ஆக மாறியது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி, 1,012 ஆக உயர்ந்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் 23 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் திண்டல் பாலாஜி கார்டன், கே.ஏ.எஸ்.நகர், நாடார்மேடு, காமராஜ் வீதி, மூலப்பாளையம் விநாயகர்கோவில் வீதி, பெரியவலசு, ஓடைப்பள்ளம் ஜீவானந்தம்ரோடு, மரப்பாலம், வி.வி.சி.ஆர். நகர் அகத்தியர் 2-வது வீதி, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதி, கிருஷ்ணம்பாளையம், ராஜாஜிபுரம் கே.என்.கே.ரோடு, வைரபாளையம் மாரியம்மன் கோவில் வீதி, ஆர்.என்.புதூர் ஜவுளிநகர், கொத்துக்காரன்புதூர், முனிசிபல் சத்திரம் காலமேகம்தெரு, வீரப்பன்சத்திரம் மாரப்பன்வீதி, பெரியண்ணா வீதி ஆகிய பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் வெள்ளாளபாளையம், கஸ்பாபேட்டை, சித்தோடு அருகே லட்சுமிநகர், பவானிசாகர், சத்தியமங்கலம் அருகே கொமராபாளையம் ஓவியர் தெரு, அய்யப்பன் கோவில் வீதி, ரங்கசமுத்திரம் காந்திநகர், பத்ரகாளியம்மன் கோவில் மேற்கு தெரு, ஆலத்துகோம்பை, கோபிசெட்டிபாளையம் வண்டிப்புதூர், குள்ளப்பநாயக்கனூர், மதுரைவீரன் கோவில் தெரு, பொலவக்காளிபாளையம், டி.என்.பாளையம் அருகே புஞ்சைதுறையம்பாளையம், டி.ஜி.புதூர், பவானி பழனிபுரம் முதலாவது வீதி, சரவணம்பட்டி, மீனாட்சி கல்யாண மண்டப வீதி, தேவபுரம், பழைய பஞ்சாயத்துரோடு மேற்கு வீதி, வர்ணபுரம் குருநாதன்வீதி, வரதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 664 பேர் குணமடைந்தனர். இதில் 18 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 332 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயருவதை போலவே பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மாதவகிருஷ்ணா வீதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கடந்த 20-ந் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதேபோல் பெருந்துறையை சேர்ந்த 62 வயது மூதாட்டி கொரோனா தொற்று ஏற்பட்டதால், கடந்த 4-ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் 6-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 2 பேர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story