மேலும் 3 பேரின் உயிரை பறித்த தொற்று: குமரியில் கொரோனாவுக்கு இதுவரை 82 பேர் பலி


மேலும் 3 பேரின் உயிரை பறித்த தொற்று: குமரியில் கொரோனாவுக்கு இதுவரை 82 பேர் பலி
x
தினத்தந்தி 9 Aug 2020 12:00 PM IST (Updated: 9 Aug 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 3 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன், தினமும் 3 பேர் முதல் 5 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 79 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 3 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது. அதாவது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 62 வயது பெண் 30-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதே போல பறக்கை பகுதியை சேர்ந்த 29 வயது ஆண், கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த 62 வயது பெண் என 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் சோதனை சாவடிகள் மூலம் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி மொத்தம் 6 ஆயிரத்து 75 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தகவல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குமரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் நேற்று 197 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தில் குளறுபடி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சம் ஏற்பட்டு வருகிறது. எனவே சரியான விவரங்களை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Next Story