போலீசாரை மிரட்டும் கொரோனா: குமரியில் மேலும் 3 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தொற்று - போலீஸ் நிலையம் மூடப்பட்டது


போலீசாரை மிரட்டும் கொரோனா: குமரியில் மேலும் 3 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தொற்று - போலீஸ் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 9 Aug 2020 11:30 AM IST (Updated: 9 Aug 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் மேலும் 3 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் போலீசார் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வெவ்வேறு போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என களப்பணியாளர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் போலீசாரை கொரோனா மிரட்டுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பாதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் ஒரே நாளில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அதாவது, நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பலர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரும், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டரும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தங்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் அவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தனர். இதற்கான பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றிய அறை முழுவதும் நேற்று கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அந்த அறையை மட்டும் தற்காலிகமாக போலீசார் மூடி வைத்தனர்.

இதேபோல நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கான தனிப்பிரிவு ஏட்டும் கொரோனா தொற்றுக்கு ஆளானார். மேலும் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் பற்றிய விவரங்களை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதே சமயத்தில், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இரணியல் அருகே கொடுப்பக்குழி பகுதியை சேர்ந்த அவருக்கு 48 வயது ஆகிறது. கடந்த புதன்கிழமை உடல் நலமில்லாமல் வீட்டுக்கு சென்றார். அவருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் மூடப்பட்டது. போலீஸ் நிலையத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருடன் பணிபுரிந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.

இதனால் அவருடன் பணி புரிந்த போலீசார் அறிஞர் அண்ணா கல்லூரிக்கு சென்று, கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரியை கொடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் தற்காலிகமாக கார் நிறுத்தும் இடத்துக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

Next Story