கர்நாடக சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து கொரோனா தாக்கி வருகிறது. கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள்
சாமானிய மக்களையும், கொரோனா போராளிகளையும் பாகுபாடு பார்க்காமல் அந்த வைரஸ் தாக்கி வருகிறது. அதுபோல் கொரோனா பாதிப்பால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளை அந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை. இதுவரை 1.75 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மாநில தலைநகரான பெங்களூருவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதற்கிடையே இந்த வைரஸ் தொற்றுக்கு மாநிலத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோமசேகர், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல், அனில் பெனகே, பாரண்ணா முனவள்ளி, பசவராஜ் மத்திமோட், ஹாலப்பா ஆச்சார், ஹரதாளு ஹாலப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவண்ணா, அஜய்சிங், பிரசாந்த் அப்பய்யா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, ரங்கநாத், பரமேஸ்வர் நாயக், ராகவேந்திர ஹித்னால், புட்டரங்கஷெட்டி, யதீந்திரா, சாமனூர் சிவசங்கரப்பா ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
மேலும் ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்கவுடா, நாகனகவுடா, சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, எம்.பி.க்கள் சுமலதா, பகவந்த் கூபா, எம்.எல்.சி.க்கள் பிரானேஷ், சந்தேஷ் நாகராஜ், பிரசன்னகுமார், சந்திரசேகர் பட்டீல் உள்பட 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா
முதல்-மந்திரி எடியூரப்பாவின் மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீராமுலு. இவர் சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மந்திரி ஸ்ரீராமுலு தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் அடிக்கடி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனையும் நடத்தி வந்தார். அத்துடன் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு சென்றும் அவர் அடிக்கடி நேரில் பார்வையிட்டதுடன் ஆய்வு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீராமுலு தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். நேற்று ஸ்ரீராமுலுவின் கொரோனா பரிசோதனை அறிக்கை வந்தது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மந்திரி ஸ்ரீராமுலுவும் உறுதி செய்து உள்ளார்.
மக்கள் பணியாற்ற வாய்ப்பு
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது:-
எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. இதனால் என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தேன். இதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அனைத்து துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது துறை அதிகாரிகளும் கொரோனா தடுப்பு மற்றும் பிளேக் நோய் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததும், மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களும் சென்று மக்கள் பணியாற்ற எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த கஷ்டமான நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்குமாறு கடவுளிடம் கேட்டுக்கொண்டு உள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மேலும் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
37 ஆக உயர்வு
ஸ்ரீராமுலுவுடன் சேர்ந்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது. சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கே கொரோனா தாக்கி இருப்பது, கர்நாடக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு வைரஸ் தொற்று எப்படி பரவியது என்று தெரியவில்லை. இதற்கிடையே கொரோனா பாதித்த மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சர்க்கரை அளவு, ரத்தம் அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து, அதற்கு தகுந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த 2 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீராமுலு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story